image description
# 397086
USD 35.00 (No Stock)

Tamilt Tokuppu Marapu : Eṭṭuttokaip Paṇuvalkaḷ=தமிழ்த் தொகுப்பு மரபு : எட்டுத்தொகைப் பனுவல்கள்

Author :  Cujā Cuyampu=சுஜா சுயம்பு

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā Patippakam, சென்னை =Chennai
ISBN 9789384915964
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info 760p. ; 22 cm.
Product Weight 780 gms.
Shipping Charges(USD)

Product Description

தமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கப் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. இத்தொகுப்பு நூல்களில் பாடல்களோடு சம்பந்தப்பட்ட திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர், வண்ணம், தூக்கு, பண், பெயர், இசை வகுத்தோர் முதலிய குறிப்புகள் பிற்காலத்தில்தான் அப்பாடல்களோடு இணைக்கப்பட்டன. சங்கப் பாடல்கள் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்தில் அவற்றைத் தொகுத்த தொகுப்பாளர்களால் தரப்பட்ட இவ்விளக்கங்கள் குறித்து விவாதிப்பதாக அமைகிறது ‘தமிழ்த்தொகுப்பு மரபு’ என்னும் இந்நூல். சங்கப்பாடல்களுக்கு அமைந்த இக்குறிப்புகள் குறித்துத் தற்காலத் தமிழ்ப் புலமை உலகில் நிலவி வரும் பொதுவான / மேம்போக்கான எண்ணங்களைக் களைந்து, அத்தகு விளக்கங்கள் குறித்து நல்லதொரு புரிதலை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது. சங்கப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள இவ்விளக்கங்கள் இதுவரை திணை, துறை விளக்கங்கள் என்றும் அடிக்குறிப்புகள் என்றும் கொளு என்றும் வழங்கிவந்த சூழலில் அத்தகு சொற்களின் போதாமையை உணர்த்தி, அவ்விளக்கங்களைத் ‘தொகுப்புக்குறிப்புகள்’ என்றும் ‘குறிப்புத்தொடர்கள்’ என்றும் புதிய கலைச்சொற்களால் அடையாளப் படுத்தியுள்ளது இந்நூல். சங்க இலக்கிய பயில்வு முறையில் பிரிப்பற்று இணைந்துள்ள இத்தொகுப்புக் குறிப்புகளும் குறிப்புத்தொடர்களும் சங்க இலக்கிய வாசிப்பிற்குத் துணை புரிகின்றனவா? இத்தொகுப்புக்குறிப்புகளுள் குறிப்பாகத் திணை, துறைக் குறிப்புகள் குறிப்பட்ட பாடலின் பொருண்மையோடு பொருந்திச் செல்கின்றனவா? என்பன போன்ற வினாக்களை முன்னிறுத்தி அவற்றிற்கான விடைகளை ஆய்ந்து கண்டடைந்துள்ளது இந்நூல். இவ்வாறான ஆய்வு முயற்சி, பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் நிலவிய தொகுப்பாளர் மரபு, அகம், புறம் எனும் பொருளிலக்கணப் பிரிவிற்கும் இத்தொகுப்புக் குறிப்புகளுக்கும் இடையேயான உறவு நிலை, இலக்கண உரையாசிரியர்கள் சங்கப் பாடல்களையும் அவற்றுக்கான தொகுப்புக்குறிப்புகளையும் தங்களது உரைச் செயல்பாட்டின் போது எதிர்கொண்ட விதம், சங்கப் பிரதிகளைத் தொடக்க காலத்தில் பதிப்பித்த பதிப்பாளர்களின் இத்தொகுப்புக்குறிப்புகள் சார்ந்த புலமைச் செயல்பாடு ஆகியன முறையே தொகுப்பாளர் மரபு, இலக்கண மரபு – அகம், இலக்கண மரபு – புறம், உரையாசிரியர் மரபு, பதிப்பாளர் மரபு என ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டு இந்நூலுள் விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழின் தொன்மையான சங்கப் பாடல்களில் அமைந்து காணப்படும் இத்தொகுப்புக் குறிப்புகள் குறித்த வரலாற்று முறையிலான இந்த ஆய்வின் வழி சில அரிய தகவல்கள் தமிழ்ப் புலமை உலகிற்குக் கையளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். தமிழ்ச் செவ்விலக்கிய மரபாக அமைந்த திணை இலக்கிய மரபு தொடர்ந்து வளர்ந்து வரும் வாய்ப்பினைத் தமிழ்ச் சூழலில் இழந்திருந்தாலும். அவ்விலக்கியங்கள் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட தொகுப்புக்குறிப்புகள் அவற்றின் பின்னர் தோன்றிய இலக்கண நூல்களுக்குப் பெரும் பங்களிப்பை நல்கியுள்ள தன்மை இனங்காட்டப்பட்டுள்ளது. தொகுப்புக் குறிப்புகளுள் திணைசார்ந்த குறிப்புகளை உரையாசிரியர்களே வழங்கியுள்ளனர் என்னும் கருத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட உதிரிப் பாடல்களின் தொகுப்புகள், ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொகுப்புகள், பின்னதன் தொடர்ச்சியாக அமைந்த கலித்தொகை, பரிபாடல் ஆகிய தொகுப்புகள் எனும் வகையில் சங்கப் பாடல்களின் முத்திற தொகுப்பு மரபு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அகம், புறம் என்னும் பொருட்பகுதி அகம், புறம், அகப்புறம், புறப்புறம் எனும் நான்காகத் தொல்காப்பியத்திற்குப் பின் வளர்ந்துள்ளது என்பதும், புறத்திணைகளைப் புறம், புறப்புறம் எனப் பகுக்கும் போக்கு தொல்காப்பிய உரையாசிரியர்களிடம் இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளன. கலித்தொகைக்கான துறைக் குறிப்பினை எழுதியவர் அதன் உரையாசிரியரான நச்சினார்க்கினியரே என்னும் கருத்து நிறுவப்பட்டுள்ளது. செவ்விலக்கியப் பனுவல்களைத் தொடக்க காலத்தில் பதிப்பித்த பதிப்பசிரியர்களும் இத்தொகுப்புக்குறிப்புகள் சார்ந்து உரையாசிரியர்களுக்கு இணையாகச் செயல்பட்டுள்ளனர். அவர்களது புலமைச் செயல்பாடும் இங்கு உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாடியவர், பாடப்பட்டவர், பாடல் பாடப்பட்ட சூழலாகக் கருதப்பட்ட இடம் ஆகிய குறிப்புகளைத் தரும் குறிப்புத்தொடர்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. இக்குறிப்புத்தொடர்களுக்கும் புறநானூற்றுப் பாடல் பொருண்மைக்கும் உள்ள தொடர்பும் சில வரலாற்றுக் குறிப்புகளின் நம்பகத்தன்மையும் இங்கு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வினை நிகழ்த்துவதற்காக ஆய்வாளர் திரட்டியுள்ள பின்னிணைப்புகள் அவரது உழைப்பினையும் ஆர்வத்தையும் காட்டி நிற்கின்றன. தமிழின் தனித்த அடையாளமான செவ்விலக்கியப் பிரதிகள் மீது காலந்தோறும் நிகழ்த்தப்பட்ட வசிப்பு முறைகளை, அப்பிரதிகளுக்குத் தரப்பட்ட தொகுப்புக்குறிப்புகளை முன்னிறுத்தித் திறம்பட விவாதித்துள்ளது இந்நூல்.

Product added to Cart
Copied